செய்திகள்

குட்கா ஊழல் வழக்கில் துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடைநீக்கம்

Published On 2019-05-30 21:13 GMT   |   Update On 2019-05-30 21:19 GMT
ரூ.90 கோடி குட்கா ஊழல் வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வுபெற இருந்த ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மன்னர் மன்னன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது.
சென்னை:

தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பிய ரூ.90 கோடி குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் தொழில்அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 8 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.




குட்கா ஊழல் அரங்கேறியபோது சென்னை செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன் மீது இந்த வழக்கில் முக்கியமாக புகார் கூறப்பட்டது. அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

மன்னர் மன்னன் தற்போது மதுரை ரெயில்வே போலீசில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) பணியில் இருந்து ஓய்வுபெற இருந்தார். இந்தநிலையில் குட்கா ஊழல் புகாரில் சிக்கிய மன்னர் மன்னன் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

மன்னர் மன்னன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது தமிழக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News