செய்திகள்

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயருகிறது

Published On 2019-05-29 08:08 GMT   |   Update On 2019-05-29 08:57 GMT
தனியார் பால் விலை ஜுன் 1-ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன.
சென்னை:

தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனமும் 5 தனியார் பால் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

பால் உற்பத்தியாளர்களி டம் இருந்து இவைகள் பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி தரம் பிரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றன.

ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. ஹட்சன் (ஆரோக்கியா), ஹெரிட்டாஷ், டோட்லா, ஜெசி, திருமலா போன்ற ஆந்திர மாநில பால் நிறுவனங்களும் போட்டி போட்டு பால் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 குறைவாக விற்கப்படுகிறது. அதனால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

ஆவின் பால் புல்கிரீம் லிட்டர் ரூ.45, சமன்படுத்தப்பட்ட பால் ரூ.37க்கு விற்கப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் பால் விலை ஜுன் 1-ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயருகிறது. ஆரோக்கியா மற்றும் ஹட்சன் பால் விலை மட்டும் உயருகின்றன. கொள்முதல் விலையை காரணம் காட்டி விலை உயர்த்தப்படுவதாக அந்நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ஆரோக்கியா புல்கிரீம் லிட்டர் பால் ரூ.54-ல் இருந்து ரு.56 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.42-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.

ஹெரிட்டேஜ் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.52-ல் இருந்து ரு.54 ஆகவும் உயருகிறது.

இதுகுறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி கூறியதாவது:-

தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன. இந்த வருடத்தில் விலை உயர்வு இரண்டாவது முறையாகும். இதனை அரசு தடுக்க வேண்டும். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்க தலைவர் செங்குட்டுவேலு மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-


ஆவின் பால் கொள்முதல் விலை 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன்படி பசும்பால் லிட்டர் ரூ.28-க்கும், எருமை பால் ரு.32-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது மாட்டு தீவனம் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருத்துவ செலவு மற்றும் பராமரிப்பு செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.16 அதிகமாக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. கடந்த முறை 1 லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.5 அதிகரிக்கப்பட்டது. விற்பனை விலை ரூ.10அதிகமானது.

5 வருடங்களாக பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படவில்லை. பால் மாடு வளர்ப்பவர்கள் அதிக செலவு காரணமாக அதிக சுமையை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை குறைந்தது லிட்டருக்கு ரூ.10 அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News