செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு உதவுங்கள் - முன்னாள் மாணவர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு

Published On 2019-05-28 19:53 GMT   |   Update On 2019-05-28 19:53 GMT
அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்து இருக்கிறார்.
சென்னை:

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தற்போது தொழில் அதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும், தங்களுடைய சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்.

அதன்மூலம், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கின்றேன். 2018-19-ம் ஆண்டு எங்களுடைய அழைப்பினை ஏற்று ரூ.58 கோடி மதிப்பில் 519 அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அதை செய்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.



கல்வி என்ற ஒப்பற்ற செல்வத்தை அடுத்த தலைமுறையினருக்கு வழங்க சேவை மனப்பான்மையும், அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட முன்னாள் மாணவர்களையும், தொழில் நிறுவனங்களையும் தாங்கள் கல்வி பயின்ற மற்றும் தங்கள் நிறுவனத்துக்கு அருகில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கு எந்த தடையும் தாமதமும் இன்றி உடனடியாக பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போது தான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளம் மிகு அரசு பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News