செய்திகள்

மலேசியாவில் மீட்கப்பட்ட தமிழக கராத்தே வீரர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி

Published On 2019-05-27 09:18 GMT   |   Update On 2019-05-27 09:18 GMT
மலேசியாவில் மீட்கப்பட்ட தமிழக கராத்தே வீரர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று முகாம் அலுவலகத்தில் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
சென்னை:

தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மலேசியா நாட்டின் செலாங்கூரில் மே 12 முதல் 19 வரை நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆவடியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர்.

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற 16 மாணவர்கள், அவர்களது 2 பயிற்சியாளர்கள், அம்மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட 29 பேர் தாயகம் திரும்ப முடியாமல், 22.5.2019 அன்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவிக்கும் செய்தியை அறிந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த 29 பேர் சென்னை திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு அவர்களுக்கான இருப்பிட வசதி, உணவு, சென்னை திரும்ப விமான பயணச் சீட்டுகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக 29 நபர்கள் பாதுகாப்பாக 23.5.2019 அன்று சென்னை திரும்பினர்.

பாதுகாப்பாக சென்னை திரும்ப, தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுத்தமைக்காக அந்த கராத்தே போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 29 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று முகாம் அலுவலகத்தில் சந்தித்து தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

அம்மாவின் அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணிபுரிந்த தமிழகத்தைச் சார்ந்த தொழிலாளர், மீனவர்கள் உள்ளிட்ட 221 நபர்களை மீட்டு பத்திரமாக தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News