செய்திகள்

திண்டுக்கல் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதி

Published On 2019-05-18 10:08 GMT   |   Update On 2019-05-18 10:08 GMT
திண்டுக்கல் நகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னல்களுடன் சூறாவளி காற்று வீசி வருகிறது. மழை வருவதுபோல் ஏமாற்றி செல்கிறது.

பலத்த காற்று வீசுவதால் மின் வயர்கள் சேதம் அடைந்து அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க பராமரிப்பு பணிக்காகவும் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி 2 முதல் 3 மணி வரை மின் தடை அமல்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கொசுக்கடியும் சேர்ந்து இருப்பதால் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சிறு தொழில்களும் மின் தடையால் பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே இது குறித்து மின்சாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. எனவே இதுபோன்ற காரணங்களால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது. இருந்தபோதும் திண்டுக்கல் நகர் பகுதியில் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

Similar News