செய்திகள்
பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடக்கும் காட்சி

சிசிடிவி கேமராவை திருப்பிவைத்துவிட்டு வக்கீல் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2019-05-18 10:02 GMT   |   Update On 2019-05-18 10:02 GMT
ஸ்ரீமுஷ்ணத்தில் வக்கீல் வீட்டில் சிசிடிவி கேமராவை திருப்பிவைத்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்-விருத்தாசலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாரி (வயது 55), வக்கீல். இவருடைய மனைவி இந்திரா (58). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுடன் இந்திராவின் தாய் பாப்பாத்தியும் வசித்து வருகிறார். இந்த நிலையில் பாப்பாத்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பாரியும், அவரது மனைவியும் நேற்று காலை காரில் அழைத்து சென்றனர்.

இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சம், 3 பவுன் நகை மற்றும் 200 கிராம் வெள்ளி காசுகளையும் மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பாரியும், அவரது மனைவி இந்திராவும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பாரி, வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை-பணம் கொள்ளைபோய் இருந்தன.

இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் மர்ம மனிதர்கள் அவர்களது முகம் பதிவாக வண்ணம் கேமராக்களை சுவற்றின் பக்கம் திருப்பிவைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். கேமராவில் காட்சிகள் பதிவாகும் ஹார்ட்டிஸ்க்குகளையும் எடுத்து சென்றுவிட்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News