செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்- வானிலை மையம் தகவல்

Published On 2019-05-18 09:38 GMT   |   Update On 2019-05-18 09:38 GMT
கடலோர மாவட்டங்களை தவிர தமிழகத்தில் உள் மாவட்டங்களில் 3 நாட்கள் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது.

இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் உள் மாவட்டங்களில் 3 நாட்கள் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த அனல் காற்று 3 நாட்களுக்கு வீச வாய்ப்பு உள்ளது.


வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் அது அனல் காற்றாக மாறி வீசக்கூடும். இயல்பைவிட 5 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அனல் காற்று இருக்காது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதியில் லேசான மழை பெய்யக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனல் காற்று வீசுவதால் பொது மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்கலாம். வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்து செல்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

சிறு குழந்தைகள், பெரியவர்கள் பகலில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
Tags:    

Similar News