செய்திகள்

பொன்னேரியில் மின்வெட்டால் அவதி: மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-05-18 06:48 GMT   |   Update On 2019-05-18 06:48 GMT
பொன்னேரியில் மின்வெட்டால் அவதி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பொன்னேரி:

பொன்னேரி, மீஞ்சூர், தடப்பெரும்பாக்கம், வேண்பாக்கம், நாலூர், இலவம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு பகல் என சுழற்சி முறையில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மின்வாரிய துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 10 மணிக்கு பொன்னேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அங்கு அதிகாரிகள் யாரும் வராததால் பொன்னேரி திருவொற்றியூர் சாலை வேண்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மின்வாரிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனி அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது என உத்தரவாதம் தர வேண்டும் என வலியுறுத்தினர். எனினும் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போராட்டம் நடத்திய பிறகு உடனே மின்சாரம் வழங்கப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் 1 மணி நேரம் வழக்கம் போல மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகி அனைத்து கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

மின்சாரம் இல்லாத நேரத்தில் வேண்பாக்கம் துணைமின் நிலையத்துக்கு போன்செய்தால் எடுப்பதில்லை. போனை எடுத்து கீழே வைத்து விடுகின்றனர். அதிகாரிகளுக்கு போன் செய்தாலும் எடுப்பதில்லை.

மின்சாரம் இல்லாத நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளன அதை சரியாக பயன்படுத் துவதில்லை எனவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News