செய்திகள்

திருப்புவனம் ரெயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி

Published On 2019-05-14 18:09 GMT   |   Update On 2019-05-14 18:09 GMT
மதுரையில் இருந்து பரமக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் ரெயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் தற்போது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
திருப்புவனம்:

மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக மதுரை ரிங் ரோட்டில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் தரை வழியாக சாலைகள் அமைக்கும் பணி சில பகுதிகளில் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இந்த சாலையில் ரெயில்வே இணைப்பு சாலை பல இடங்களில் வருவதால் அந்த இடங்களில் மட்டும் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றன. அதில் ஒரு சில இடங்களில் மட்டும் இந்த பணிகள் தாமதமாக நடந்து வந்தன.

இந்த உயர் மட்ட மேம் பாலம் கட்டும் போது இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டன. சில இடங்களில் இணைப்புச் சாலை வழியாகத்தான் நகருக்குள் செல்ல முடியும். உதாரணமாக திருப்புவனத்தில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலத்தின் வலதுபுறம் திருப்புவனம் நகருக்குள் செல்லும் இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலை மூலம் மதுரையில் இருந்து வரும் நகர் மற்றும் புறநகர் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் திருப்புவனத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

இதேபோல் திருப்புவனத்தில் இருந்து மதுரை நோக்கி செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் இந்த உயர் மட்ட மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக வந்து தென்புறத்தில் அமைக்கப்பட்ட இணைப்பு சாலை வழியாக சென்று வருகிறது. திருப்பு வனம், ரெயில்வே மேம்பாலம் பணி நிறைவு பெற தாமதமானதால் பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை செல்லும் அனைத்து வாகனங்களும் நான்கு வழிச்சாலை வழியாக வந்து திருப்புவனம், புல்வாய்க்கரை சந்திப்பில் திரும்பி ரெயில்வே கேட் வழியாக திருப்புவனம் நகருக்குள் சென்று அதன் பின்னர் மதுரைக்கு செல்கின்றன.

இதனால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது மணலூரில் கட்டப்பட்ட மேம்பாலம் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டதால் பயண நேரம் குறைந்துள்ளது. மேலும் திருப்புவனம் மேம்பாலத்தில் தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் மேம்பாலத்தின் ஒருபகுதி போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டதால், மதுரையில் இருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக சென்று வரும் அனைத்து வாகனங்களும் திருப்புவனம் மேம்பாலம் வழியாக ஊருக்குள் வராமல் நான்கு வழிச்சாலையில் சென்று வருகின்றன.

மேலும் இடைநில்லா பஸ்கள் திருப்புவனம் நகருக்குள் செல்லாததால், பயண நேரம் குறைவாகவும், போக்குவரத்து பாதிப்பு இல்லாமலும் உள்ளது. இதனால் திருப்புவனம் நகருக்குள் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சிறிது குறைந்துள்ளது.
Tags:    

Similar News