தஞ்சை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம்
தஞ்சாவூர்:
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள சுற்றுலா தலங்களை காண மகன் ஹர்ஷன்வர்தன்(10), உறவினர்கள் காஜித் குமார் (18), அனுபாமா (18) ஆகியோருடன் நேற்று சென்னையில் இருந்து ஒரு டிராவல்ஸ் காரில் தஞ்சைக்கு புறப்பட்டார். காரை ராமநாபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த டிரைவர் நெல்சன்(28) என்பவர் ஓட்டி வந்தார்.
கார் தஞ்சை அடுத்த வளம்பக்குடி அருகே உள்ள பெரியார் சமத்துவபுரம் பகுதியில் நள்ளிரவில் வந்தபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அந்த நேரத்தில் எதிரே தஞ்சை நோக்கி சென்ற லாரியின் பின்பக்கம் கார் மோதி பின்னர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் தியாகராஜன் உள்பட 5 பேரும் காருக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 5 பேரையும் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.