செய்திகள்
கோப்புப்படம்

திமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் மறக்கவில்லை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2019-05-07 11:57 GMT   |   Update On 2019-05-07 11:57 GMT
தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்கள் மறக்கவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
ஒட்டப்பிடாரம்:

ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த 13 நாட்களுக்கும் மேலாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார்.

தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், தலைமை கழக பேச்சாளர் ஜெயக்கோவிந்தன் மற்றும் விருதுநகர் மாவட்ட ஒன்றிய, நகர் நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது, ஒட்டப்பிடாரம் தொகுதியில் 50 பூத்களில் களப்பணியாற்றி வருகிறோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர்வதற்கும் ஒட்டு மொத்தமாக நமக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒடுக்கப்பட்ட சமுதாயம் வாழ்கின்ற தொகுதியாகும். வ.உ. சிதம்பரனார்பிள்ளை பிறந்த ஊர், வீரன் சுந்தரலிங்கம் அவதரித்த வீரமண். வெள்ளையத் தேவன் வாழ்ந்த பூமி, பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரம்புரிந்த மண் இப்படி பல்வேறு வீரத்தலைவர்கள், தேசத் தலைவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்பு மிகுந்தது.

அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சரித்திரங்களை ஒவ்வொரு வாக்காளர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த வாக்காளர்களும் மாற்று கட்சிகளுக்கு வாக்களிக்க நினைக்கவே கூடாது. அந்த அளவிற்கு நாம் நம் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி அனைத்து வாக்காளர்களும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும் வகையில் களப்பணியாற்ற வேண்டும்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற 20 மணி நேரம் மின்வெட்டு, கட்டபஞ்சாயத்து, நில அபகரிப்பு உட்பட எண்ணற்ற அராஜகங்கள் மற்றும் அவலங்கள் தமிழக மக்கள் மனதில் இன்றும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனை யாரும் மறக்கவில்லை என்றார்.
Tags:    

Similar News