செய்திகள்

கோடையில் மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

Published On 2019-05-06 23:10 IST   |   Update On 2019-05-06 23:10:00 IST
கோடையில் மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சிவகங்கை:

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- மாவட்டத்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி வழங்க நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்கிடும் வகையில் துறை அலுவலர்கள் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நகராட்சி நிர்வாகம் தங்கள் பகுதிக்குட்பட்ட நீர்தேக்க தொட்டிகள் மற்றும் குடிநீர் வழங்கும் இணைப்புகள் சரியாக உள்ளதா என கண்காணிப்பதுடன், குடிநீரில் சரியான முறையில் குளோரிநேசன் செய்யப்பட்டுள்ளதா என அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குடிநீர் இணைப்புகளில் பழுதுகள் ஏற்பட்டால் குடிநீர் வடிகால் வாரியத்துறை பணியாளர்கள் வரும் வரை காத்திருக்காமல் மக்களின் தேவையை உணர்ந்து உடனடியாக நகராட்சி நிர்வாகம் பழுதை சரி செய்ய வேண்டும். பேரூராட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட இடங்களுக்கு அவ்வப்போது சென்று குடிநீர் பணிகளை கண்காணிக்க வேண்டும்.

மேலும் பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை என்ஜினீயர்கள் ஒவ்வொரு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் சரியான அளவு முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதுடன், குறிப்பாக ஆழ்குழாய் கிணற்றின் ஆழம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின்பு அதற்கான தொகையை வழங்க வேண்டும்.

மேலும் பயன்பாடு இல்லாமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைத்து அதில் கைப்பம்புகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் ஓய்வு பெற்ற பிட்டர்களை பயன்படுத்தி கொள்ளலாம். கால சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான இடங்களுக்கு லாரிகளில் தண்ணீர் வழங்கவும் தயார்நிலையில் இருத்தல் வேண்டும். பொதுவாக குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படும் பகுதிகளுக்கு காலதாமாக பழுது பார்க்கும் பணி மேற்கொள்வதால் குடிநீர் அதிக அளவில் வீணாகிறது எனவே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக சென்று பழுதுகளை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், பேரூராட்சி துறை உதவி இயக்குநர்.ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Similar News