செய்திகள்

திருப்பத்தூர் அருகே வாலிபர் அடித்து கொலை- 3 பேர் கைது

Published On 2019-05-04 11:04 GMT   |   Update On 2019-05-04 11:04 GMT
முன்விரோதத்தில் வாலிபரை அடித்து கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் பழனியப்பன். இவருக்கும், கொங்கரத்தி பகுதியைச் சேர்ந்த நாராயணன் (30) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு பழனியப்பன் கண்டரமாணிக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தனது நண்பர்களுடன் வந்த நாராயணன் பழனியப்பனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நாராயணன் மற்றும் அவரது நண்பர்கள் கட்டையால் பழனியப்பனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது பழனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணன், அவரது மைத்துனர் சந்திரசேகர், கல்லல் செல்வம் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். அருண், வெற்றி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

கொலையான பழனியப்பனின் மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

Tags:    

Similar News