செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: மதுரை ரெயில் நிலையத்தில் போலீஸ் அதிரடி சோதனை

Published On 2019-04-26 07:51 GMT   |   Update On 2019-04-26 08:22 GMT
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியால் மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். #SrilankanBlasts

மதுரை:

இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் அப்பாவி மக்கள் பலியானார்கள்.

இதையடுத்து இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தமிழகத்தில் விமானநிலையம், வழிபாட்டு தலங்கள், பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவதை தடுக்க தமிழக கடற்கரை பகுதியில் கடற்படையினர் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். கடல் பாதுகாப்பு குறித்து கடலோர காவல் படை டி.ஐ.ஜி. ராமேசுவரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரையில் கடந்த 2 நாட்களாக முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 5 கோபுர நழைவு வாயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

மதுரை விமான நிலையத்தில் மத்திய படை போலீசார் பாதுகாப்பை அதிகரித்து உள்ளனர். விமான நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். விமான பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மதுரை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய வளாகம், தண்டவாளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று சோதனை நடத்தினர்.

மேலும் மதுரையில் இருந்து புறப்படும் ரெயில்களின் அனைத்து பெட்டிகளிலும் பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  #SrilankanBlasts

Tags:    

Similar News