செய்திகள்

ஈரோடு அருகே 2 ஆம்னி பஸ்கள் மோதல்- காயத்துடன் தப்பிய பயணிகள்

Published On 2019-04-24 11:26 GMT   |   Update On 2019-04-24 11:26 GMT
ஈரோடு அருகே இன்று அதிகாலை 2 ஆம்னி பஸ்கள் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர்.
ஈரோடு:

சென்னையில் இருந்து கோவை நோக்கி ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15 பேர் பயணம் செய்தனர். பஸ்சை வேலூரை சேர்ந்த கன்னியப்பன் (வயது 48) என்பவர் ஓட்டி வந்தார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் பவானி லட்சுமிபுரத்தில் 2 பயணிகளை இறக்கி விட்டு பஸ் மீண்டும் புறப்பட்டது.

அப்போது பின்னால் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி மற்றொரு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 25 பேர் இருந்தனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த சென்னை ஆம்னி பஸ் மீது பெங்களூரில் இருந்து வந்த ஆம்னி பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.

அதில் முன்னால் சென்ற ஆம்னி பஸ் தடுமாறியது. ரோட்டோரம் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டின்மீது மோதாமல் இருக்க டிரைவர் வண்டியை ஒடித்து ஓட்டினார். இதில் பஸ் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை.

அதே சமயம் அந்த பஸ் மீது மோதிய பெங்களூர் ஆம்னி பஸ்சில் வந்த கோவையை சேர்ந்த விஷ்ணு (27) மற்றும் சோனா (23) கலையரசு (28) லட்சுமணன் (60) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் ஈரோடு மற்றும் பவானி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்திலிருந்து 2 ஆம்னி பஸ்களின் பயணிகள் தப்பினர்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சித்தோடு போலீசார் விரைந்து சென்றனர்.

இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News