செய்திகள்

விருத்தாசலம் அருகே குடிநீர் குழாய் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2019-04-06 17:33 GMT   |   Update On 2019-04-06 17:33 GMT
விருத்தாசலம் அருகே குடிநீர் குழாய் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ளது காவனூர் ஊராட்சி. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக காவனூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காவனூர் கிராமத்தின் ஒரு பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 14-வது நிதிக்குழு மானியத்தில் குடிநீர் குழாய் அமைக்க காவனூர் கிராமத்தின் சாலையோரம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. இதுபற்றி அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து சாலையோரம் பள்ளம் தோண்டக்கூடாது என அந்த பணியை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே இதுகுறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறையில் உள்ளோம். இதனால் நாங்கள் குடிநீருக்காக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனால் எங்களுக்கு குடிநீர் குழாய் உடனடியாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழாய் அமைக்க மறுத்து விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விருத்தாசலத்தில் இருந்து பவழங்குடி செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையில் இருந்து 3 மீட்டர் தூரம் தள்ளி குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையேற்று பொதுமக்கள் அரசு பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News