செய்திகள்

ஆம்பூர் அருகே பெண்ணை கொலை செய்து காட்டுக்குள் புதைப்பு

Published On 2019-04-03 07:48 GMT   |   Update On 2019-04-03 07:48 GMT
ஆம்பூர் அருகே வனப்பகுதியில் பெண்ணை அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூர் சாலையில் வனத்துறை அலுவலகம் உள்ளது. அதன் அருகே யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளத்திலிருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது.

பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது ஒரு பெண்ணின் சேலை, செருப்புகள் கிடந்தன. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த பெண் பாலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பாலூரை சேர்ந்த அண்ணாதுரை மகன் ஆனந்தன் (20) என்பவரை அழைத்து சென்று இறந்தவரின் அருகே கிடந்த சேலையை காண்பித்தனர்.

சேலையை பார்த்த ஆனந்தன் தன்னுடைய தாயின் சேலைதான் என கூறினார்.

இதையடுத்து இறந்து கிடந்தது அண்ணாதுரையின் மனைவி செல்வி என தெரியவந்தது. அண்ணாதுரையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சனிக்கிழமை செல்வியை பைக்கில் அழைத்து சென்ற அண்ணாதுரை மாதனூர் சந்தையில் செல்வியை விட்டு விட்டு சென்றதாக கூறியுள்ளார்.

இதனால் அண்ணாதுரை மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரையும், அவருடைய மகன் ஆனந்தனையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் புதைக்கப்பட்ட செல்வியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். செல்வியை யார், எதற்காக கொலை செய்து புதைத்து விட்டு சென்றனர் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News