செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: அத்தை-மருமகன் பலி
வேளாங்கண்னி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் அத்தை-மருமகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் முருகேசன் (வயது 26) மீனவர். இவரது அத்தை மணிமேகலை (60). நேற்று மணிமேகலையும் முருகேசனும் மோட்டார் சைக்கிளில் வெள்ள பள்ளம் கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வேளாங்கண்ணி அருகே செருதூர் பாலம் அருகில் வந்தபோது சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முருகேசன், மணிமேகலை இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயமடைந்த மணிமேகலையை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிமேகலையும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
முன்னதாக விபத்து நடந்த இடத்தை பார்வையிட வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்தில் சிக்கிய முருகேசனை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்ப வில்லை என்று கூறி நம்பியார் நகர் உள்ளிட்ட கிராம மக்கள் சேர்ந்து செல்லூர் பாலம் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.