செய்திகள்
அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் முன்பு திரண்ட திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை படத்தில் காணலாம்

பிரசாரத்தில் காங்கிரஸ் பெண் வேட்பாளரை கத்தியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க.வினர்

Published On 2019-03-30 10:55 GMT   |   Update On 2019-03-30 10:55 GMT
கரூர் அருகே தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் பெண் வேட்பாளரை கத்தியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க.வினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #ADMK
அரவக்குறிச்சி:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் லிங்கமநாயக்கன்பட்டியில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பெண்கள் சிலர் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். தகாத வார்த்தைகளாலும் பேசினர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 2 பேரும் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 2 பேரையும் மீட்டு பள்ளப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதனிடையே தரக்குறைவாக பேசியதுடன், வேட்பாளருடன் வந்தவர்களை தாக்க வந்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் நள்ளிரவில் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர்.

பின்னர் வேட்பாளர் ஜோதிமணி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அரவக்குறிச்சி பகுதி அ.தி.மு.க.வை சேர்ந்த திருமூர்த்தி (வயது 36), பெரியசாமி (26) ஆகியோர் என்னை தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனிடையே திருமூர்த்தி, பெரியசாமி தரப்பிலும் அரவக்குறிச்சி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தூண்டுதலின் பேரில் தி.மு.க. மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணியன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு, லிங்கமநாயக்கன்பட்டி சிவா உள்பட 18 பேர் சேர்ந்து தங்களை தாக்கியதாக புகாரில் தெரிவித்து இருந்தனர்.

இருதரப்பினர் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். நள்ளிரவில் போலீஸ் நிலையம் முன்பு கட்சியினர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK
Tags:    

Similar News