செய்திகள்

ஆய்வாளர் கார் மோதி பெண் காயம்- வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2019-03-29 12:49 GMT   |   Update On 2019-03-29 12:49 GMT
ஒட்டன்சத்திரத்தில் போக்குவரத்து ஆய்வாளர் வாகனம் மோதி பெண் காயம் அடைந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக இருப்பவர் பூங்குழலி. இவர் தனது காரை பெண் டிரைவர் ராணியை ஓட்ட வைத்து சென்று கொண்டிருந்தார். பழனி-ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தியேட்டர் அருகே சென்றுகொண்டிருந்தபோது எந்தவித சிக்னலும் காட்டாமல் டிரைவர் ராணி காரை திருப்பினார்.

அப்போது வயலூரை சேர்ந்த சாந்தப்பன் தனது மனைவி ஜோதிமணி (41) மகள்கள் மனோன்மணி, வர்ஷினி ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் போக்குவரத்து ஆய்வாளர் வந்த கார் சாந்தப்பன் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜோதிமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து நடந்ததை அறிந்தவுடன் டிரைவர் ராணி காரை விட்டு இறங்கி தியேட்டருக்குள் சென்று விட்டார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆய்வாளர் வந்த காரை சிறை பிடித்தனர். விபத்தில் காயம் அடைந்த ஜோதிமணியை ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனியார் பயிற்சி பள்ளியை சேர்ந்த ராணியை போக்குவரத்து ஆய்வாளர் டிரைவராக அமர்த்தி உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல விபத்தை ஏற்படுத்தினார். போக்குவரத்து விதிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய போக்குவரத்து ஆய்வாளரே அனுபவம் இல்லாத டிரைவரை பணியில் அமர்த்தியதால்தான் இந்த விபத்து நடந்தது என பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News