செய்திகள்

பட்டுக்கோட்டையில் போலீசார் போல் நடித்து பெண்ணிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு

Published On 2019-03-27 23:42 IST   |   Update On 2019-03-27 23:42:00 IST
பட்டுக்கோட்டையில் பெண்ணிடம், போலீசார் போல் நடித்து மர்ம நபர்கள் 2 பேர், 10 பவுன் நகைகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ராஜபாளையம் தெருவை சேர்ந்தவர் கணபதிராஜா. இவருடைய மனைவி சந்தானலட்சுமி (வயது50). சம்பவத்தன்று இவர் பட்டுக்கோட்டை புதுமார்க்கெட்டில் உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். புதுமார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு மர்ம நபர்கள் 2 பேர் நின்று கொண்டிருந்தனர்.

சந்தானலட்சுமியை வழிமறித்த அவர்கள் 2 பேரும், தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு ஏன் தனியாக செல்கிறீர்கள்? எங்களிடம் நகைகளை கொடுங்கள் காகிதத்தில் மடித்து பத்திரப்படுத்தி தருகிறோம் என கூறினர்.

மர்ம நபர்கள் கூறியதை நம்பிய சந்தானலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல், 1 பவுன் மோதிரம் என மொத்தம் 10 பவுன் நகைகளை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். நகைகளை வாங்கிய அந்த நபர்கள் 2 பேரும், காகிதத்தில் மடிக்காமல், நகைகளுடன் தப்பி ஓடி விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தானலட்சுமி கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். ஆனால் ஆட்கள் வருவதற்குள் மர்ம நபர்கள், நகையுடன் மாயமாகி விட்டனர்.

அந்த நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சந்தானலட்சுமி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் போலீசார் போல் நடித்து 10 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News