செய்திகள்

நைனார் மண்டபத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-03-21 13:27 GMT   |   Update On 2019-03-21 13:27 GMT
நைனார் மண்டபத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை நைனார் மண்டபம் நாகம்மன் நகர் முத்தமிழ் வீதியை சேர்ந்தவர் பாவாடை (வயது 65). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பாவாடை வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவர் தனது மனைவியுடன் வீட்டின் கீழ் தளத்திலும், அவரது மகன் கதிர்வேலு வீட்டின் மாடியிலும் வசித்து வந்தனர்.

பாவாடைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தினால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனாலும் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி பாவாடையின் மனைவி அம்பிகா தனது மகளை பார்ப்பதற்காக கடப்பாக்கத்துக்கு சென்றார். 18-ந்தேதி பாவாடையின் மகன் கதிர்வேலு தனது திருமண நாளையொட்டி மனைவியுடன் ரெட்டியார் பாளையத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று கதிர்வேலு வீடு திரும்பிய போது பெற்றோர் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து கதவை திறந்து பார்த்த போது அங்கு மின் விசிறியில் வேட்டியால் தூக்குபோட்ட நிலையில் தனது தந்தை பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கதிர்வேலு தனது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு சென்ற அதே நாளில் பாவாடை தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி, உதவி சப்- இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் வானூர் அருகே அருவாப் பாக்கத்தை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 55). இவர் கோரிமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் தனது மனைவி புஷ்பவேணி (50)யுடன் சஞ்சீவி நகரில் உள்ள பள்ளிக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்தார்.

புஷ்பவேணி நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் வாரந்தோறும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை பணி முடிந்து காத்தவராயன் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர சஞ்சீவி நகருக்கு சென்றார். அப்போது வீட்டில் புஷ்பவேணி சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் ஏட்டு வெங்கடேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News