செய்திகள்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருச்சியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #pollachiissue
திருவெறும்பூர்:
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிட வலியுறுத்தி திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரி மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் இன்று 2-வது நாளாக கல்லூரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் திருச்சி கோர்ட்டில் இன்று நடைபெற்ற வழக்குகளில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதன் காரணமாக வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. இதேபோல் முசிறி, லால்குடி, மணப்பாறை கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். #pollachiissue