செய்திகள்
விபத்தில் சிக்கிய ஜீப்பின் பின்பகுதி சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

பண்ருட்டி அருகே விபத்து- பறக்கும் படை அதிகாரி சென்ற ஜீப் மீது அரசு பஸ் மோதல்

Published On 2019-03-18 07:14 GMT   |   Update On 2019-03-18 07:14 GMT
பண்ருட்டி அருகே நள்ளிரவில் பறக்கும் படை அதிகாரி சென்ற ஜீப் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
பண்ருட்டி:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை கடத்துவதை தடுக்க பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம்- காட்டுக்கூடலூர் பகுதியில் பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார் (வயது 43) தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் (56) மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் ஜீப்பில் ஏறி பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த ஜீப் காடாம்புலியூர் தாமரைகுளம் அருகே நள்ளிரவு 1.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த பறக்கும் படை அதிகாரி ஜீப் மீது மோதியது.

இதில் ஜீப்பின் பின்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. அதில் பயணம் செய்த தாசில்தார் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல், ஏட்டுகள் சரவணன், ஆனந்தபாபு, போட்டோ கிராபர் சார்லஸ் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News