செய்திகள்

கடையம் அருகே வயல்வெளிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

Published On 2019-03-02 17:05 IST   |   Update On 2019-03-02 17:05:00 IST
கடையம் அருகே காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து தென்னைகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியது.

கடையம்:

கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமம், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இங்கு பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியுள்ளனர். வனப்பகுதியில் இருந்து அவ்வபோது ஊருக்குள் புகும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல் வெளிகளில் புகுந்து ஆடுகள், நாய்களை கடித்து குதறி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக வந்தன. அவை வயல்வெளிக்குள் புகுந்து தென்னைகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தின. 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை யானைகள் சாய்த்தன.

இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News