செய்திகள்

செக் மோசடி வழக்கு - நடிகர் நெப்போலியனுக்கு கரூர் கோர்ட்டு பிடிவாரண்டு

Published On 2019-02-27 12:01 GMT   |   Update On 2019-02-27 12:01 GMT
செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் நெப்போலியனுக்கு கரூர் கோர்ட்டு பிடிவாரண்டு அனுப்பியுள்ளது. #ActorNapoleon
கரூர்:

கரூர் காமராஜபுரம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர் நடிகர் கவுதம் கார்த்திக், நெப்போலியன் ஆகியோர் நடித்த முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்திற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த படம் வெளியானபோது, ரூ.53 லட்சத்து 54 ஆயிரத்தை கோபால கிருஷ்ணனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. அப்போது நெப்போலியன் அந்த பணத்திற்கு பொறுப்பேற்று தருவதாக கூறியுள்ளார்.

பின்னர் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்தினார். மீதமுள்ள ரூ.28 லட்சத்து 54 ஆயிரத்திற்கான காசோலையை, கோபாலகிருஷ்ணனுக்கு கொடுத்திருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட வங்கியில் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியது.

இதனால் ஏமாற்றமடைந்த கோபாலகிருஷ்ணன், இதுதொடர்பாக நெப்போலியன் மீது, கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக 5 முறைக்கு மேல் நெப்போலியனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகோத்தமன், வழக்கில் ஆஜராகாத நெப்போலியனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை மே மாதம் 31-ந்தேதிக்கும் ஒத்திவைத்தார்.

இதனிடையே வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நெப்போலியன் தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #ActorNapoleon
Tags:    

Similar News