செய்திகள்

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரிக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு

Published On 2019-02-26 09:09 GMT   |   Update On 2019-02-26 09:09 GMT
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரிக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி மணல் குவாரி தொடங்கியது. இதில் 18,074 லாரிகளில் மணல் எடுக்க பொதுப் பணித்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல், சுற்றுசூழல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாக மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

இதனால் ஊத்துக்கோட்டை, அனந்தேதி, போந்தவாக்கம், நந்திமங்கலம், பேரிட்டிவாக்கம், கீழ்சிற்றபாக்கம், மேல்சிற்றபாக்கம் உட்பட 10 கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் வற்றிவிட்டதால் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலபரப்பில் சாகுபடி செய்த பயிர்கள் கருகின. இதனை கண்டித்தும், மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தியும் பொது மக்கள் கடை அடைப்பு, உண்ணாவிரதம், மறியல் போன்ற தொடர் போராட்டம் நடத்தினர். மேலும் மணல் குவாரி மூடவேண்டும் என்று கோரி பொது மக்கள் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரபட்டது.

இது குறித்து மணல் குவாரியை ஆய்வு செய்ய கோர்ட் தொழில்நுட்ப குழுவை அமைத்தது. குழுவினர் ஆய்வு செய்து விதிகள் மீறப்பட்டுள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்ததால் மணல் குவாரி மூடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரணி அற்றில் மீண்டும் மணல் குவாரி தொடங்கப்பட்டது. மழை பொய்த்து போய் ஆரணி ஆறு முழுவதுமாக வற்றிவிட்ட நிலையில் மீண்டும் மணல் குவாரி தொடங்கி உள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து 10 கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், “ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மீண்டும் திறக்கப்பட்ட மணல் குவாரியை மூட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் உறுதி அளித்தார்.

Tags:    

Similar News