செய்திகள்

சுசீந்திரத்தில் தபால் நிலைய லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2019-02-25 14:59 GMT   |   Update On 2019-02-25 14:59 GMT
சுசீந்திரத்தில் தபால் நிலைய லாக்கரை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அதில் பணம் இல்லாததால் தப்பியது.
என்.ஜி.ஓ.காலனி:

சுசீந்திரம் மெயின் ரோட்டில் தாணுமாலயசுவாமி கோவிலுக்கு செல்லும் அலங்கார நுழைவுவாயில் அருகே சுசீந்திரம் தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தை கடந்த சனிக்கிழமை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று காலை தபால் அலுவலகத்தை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர்.

அப்போது தபால் நிலை யத்தின் முன்புற மற்றும் பின்புற கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சுசீந்திரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தபால் நிலையத் திற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த லாக்கரை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து இருந்தது தெரியவந்தது.

ஆனால் தபால் ஊழியர்கள் அந்த லாக்கரில் பணத்தை வைக்காததால் பணம் தப்பியது. அங்குள்ள மேஜை டிராயரில் அலுவலக உபயோகத்திற்கான 2 செல்போன்களை வைத்திருந்தனர். அவை திருட்டுப் போய் இருந்தது. மோப்ப நாய் ஓரா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் தபால் அலுவலகத்தில் இருந்து சுசீந்திரம் தெப்பகுளம் வரை ஓடியது. பிறகு தெப்பகுளத்தின் கரையில் படுத்துக்கொண்டது.

இதனால் கொள்ளையர்கள் தங்களது தடயம் சிக்கி விடாமல் இருப்பதற்காக தபால் அலுவலகத்தில் கை வரிசை காட்டியபிறகு இந்த தெப்பகுளத்தில் குளித்து விட்டு சென்று இருக்கலாம் என்று கருதுகிறார்கள். கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News