செய்திகள்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் 2-வது நாளாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீ

Published On 2019-02-25 05:27 GMT   |   Update On 2019-02-25 05:27 GMT
சத்தியமங்கலம் வனப்பகுதியில் 2-வது நாளாக தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு போக முடியாமல் திணறினர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே இக்கலூர் வனம் உள்ளது.

இந்த பகுதி மலை உச்சியில் உள்ளது. அடர்ந்த மரங்களால் நிறைந்த இந்த பகுதியில் ஏராளமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.

தற்போது கோடை வெயில் தொடங்கியதையொட்டியும் மழை பொழிவு இல்லாததாலும் வனப்பகுதி காயத்தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இக்கலூர் காட்டில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் தீ மரங்களில் பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. மலை உச்சியில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்க வனத்துறையினரால் முடியவில்லை.

இன்று (திங்கட்கிழமை) ஆசனூர் இக்கலூர் வனப்பகுதியில் 2-வது நாளாக தீ எரிந்துக் கொண்டிருக்கிறது. அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் மலை உச்சிக்கு போக முடியாமல் திணறினர்.

மலை உச்சியில் தீ பிடித்து எரிவதால் மேலே செல்லவும் வழியில்லை.

இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, “வனப்பகுதியில் பிடிக்கும் தீயை தண்ணீர் ஊற்றியும் செடி, கொடி தழைகளை வெட்டி போட்டும் அணைப்போம். ஆனால் இக்கலூர் பகுதி மலை உச்சியில் இருப்பதால் எப்படி அங்கு போய் தீயை அணைப்பது? என்று தெரியவில்லை” என்று கூறினர்.

போக முடியாத பகுதியில் தீ பிடித்தால் அந்த காட்டுத்தீ தானாகவே அணைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இக்கலூர் பகுதியில் பிடித்த காட்டுத்தீயால் பல பறவைகள், குரங்குகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் பலியாகி விட்டன. மேலும் பல வனவிலங்குகள் இடம் பெயர்ந்து இருப்பதாகவும் வன ஊழியர்கள் கூறினர்.

இதேபோல தாளவாடி வனப்பகுதி ஜீரேகள்ளி வனத்திலும் நேற்று இரவு தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த பகுதிக்கு வனஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News