செய்திகள்

சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

Published On 2019-02-17 15:19 IST   |   Update On 2019-02-17 15:19:00 IST
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க பழக்கடை, கரும்பு ஜூஸ் கடைகளை நாடி வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று வெயில் வாட்டி வதைத்தது. உடலில் நெருப்பை அள்ளி போட்டதை போல வெயில் சுட்டெரித்தது. இதனால் இரவு நேரம் கடும் புழுக்கமாக உள்ளது.

இதைபோல் இன்றும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டனர். வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்விசிறியை பயன்படுத்தினால் அனல் காற்றாக வீசுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள பலர் குடை பிடித்தபடியும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள் துப்பட்டாவில் தலை மற்றும் முகத்தை மூடியபடியும் சென்றனர்.

பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க பழக்கடை, கரும்பு ஜூஸ் கடை, இளநீர் கடை, மோர் கடை, கம்பங்கூழ், கேழ்வரகு கடை, சர்பத் கடை போன்ற கடைகளை நாடி வருகின்றனர்.

இதனால் ஏற்காடு அடிவாரம் செல்லும் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பழைய பஸ் நிலையம், கடைவீதி, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரமாக இருக்கும் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் விற்பனை களை கட்டி வருகிறது.

நுங்குகள், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவற்றை விவசாயிகள் கலெக்டர் அலுவலக சாலை ஓரமாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது.

சேலம்-கோவை, சேலம்-சென்னை, சேலம்-பெங்களூரு உள்ளிட்ட நெடுஞ்சாலையோரமாக இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் இளநீர் விற்பனை சூடுபிடித்தது.
Tags:    

Similar News