செய்திகள்
திவாகர்

பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

Published On 2019-02-15 04:11 GMT   |   Update On 2019-02-15 04:11 GMT
அரக்கோணம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் தாலுகா, மோசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன்கள் லோகநாதன், பாலகிருஷ்ணன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார்.

இதனால் லோகநாதன், பாலகிருஷ்ணன் இருவரும் ராமலிங்கம் பெயரில் உள்ள சொத்துக்களின் பட்டாவை பெயர் மாற்றம் செய்துதர கோரி மோசூர் கிராம நிர்வாக அலுவலர் திவாகரிடம் கேட்டுள்ளனர்.

அப்போது திவாகர் பட்டா பெயர் மாற்றம் செய்துதர வேண்டுமானால் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் தருவதாக லோகநாதன் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத லோகநாதன் இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் திவாகரை தொடர்பு கொண்டு பணம் கொடுக்க எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார். பணத்தை அலுவலகத்தில் வந்து கொடுத்து விடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் திவாகரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்த போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திவாகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Tags:    

Similar News