செய்திகள்

கவர்னர் மாளிகையில் நாராயணசாமி திடீர் தர்ணா - 8 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்ததால் பரபரப்பு

Published On 2019-02-13 16:44 GMT   |   Update On 2019-02-13 16:53 GMT
புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மணி நேரத்துக்கு மேலாக கவர்னர் மாளிகை வாசலில் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். #KiranBedi #Narayanaswamy #RajNivas #Protest
புதுச்சேரி:

புதுவையில் கடந்த 11-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால் 2 நாட்களில் 30 ஆயிரம் வாகன எண்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கோர்ட் மூலம் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது என்ற தகவல் பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ. உள்பட பலரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே அரசு பயணமாக மாகி சென்றிருந்த முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை புதுவைக்கு திரும்பினார். ஹெல்மெட் விவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியிருப்பதை நாராயணசாமி அறிந்தார். இதையடுத்து உடனடியாக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், காங்கிரஸ் முதல்-மந்திரி நாராயணசாமி மற்றும் அமைச்சர்களும் கருப்பு வேட்டி, சட்டை அணிந்தனர்.

நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், 
எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். 



கவர்னர் மாளிகை அருகே சாலையில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர். அதை தாண்டி முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்களை செல்லவிடாமல் தடுத்ததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கவர்னர் மாளிகை வாசல் வரை அனுமதித்தனர். அங்கு முதல்-மந்திரி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கவர்னர் மாளிகை அருகே பரபரப்பான சூழ்நிலையும், பதட்டமும் ஏற்பட்டது. 

போராட்டம் தொடர்பாக முதல்-மந்திரி நாராயணசாமி கூறுகையில், கவர்னர் கிரண்பேடி இங்கு பதவி ஏற்றதில் இருந்தே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்தார். எந்த பணியையும் செய்ய முடியவில்லை. கவர்னரால் புதுவை மாநிலமே ஒட்டுமொத்தமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். எனவே, வேறு வழி தெரியாமல் நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #KiranBedi #Narayanaswamy #RajNivas #Protest
Tags:    

Similar News