செய்திகள்

உடுமலை பகுதியில் முகாம் - 13 நாட்கள் ஒரே இடத்தில் சுற்றுவதால் சோர்வடைந்த சின்னதம்பி யானை

Published On 2019-02-13 06:20 GMT   |   Update On 2019-02-13 06:20 GMT
கடந்த 13 நாட்களாக ஒரே பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி திரிவதால் நேற்று மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. அடிக்கடி கரும்பு தோட்டத்திற்குள் சென்று படுத்து கொண்டது. #ChinnathambiElephant
உடுமலை:

கோவை சின்னத்தடாகத்தில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

ஒரு சில நாட்கள் அங்கு வசித்த யானை வனப்பகுதியை விட்டு 31-ந்தேதி வெளியேறியது. பொள்ளாச்சி வழியாக காடு, வயல்வெளிகளை கடந்து 130 கி.மீட்டர் தூரமுள்ள உடுமலை மைவாடி கண்ணாடி புதூர் பகுதிக்கு வந்தது.

கடந்த 13 நாட்களாக அங்குள்ள அமராவதி சர்க்கரை ஆலை பின்புறம் சுற்றி திரிகிறது. இதனை வனப் பகுதிக்குள் விரட்ட டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் மாரியப்பன், கலீம் கொண்டு வரப்பட்டது.

இந்த கும்கிகளுடன் சின்னதம்பி யானை நண்பர்களாக பழகியது. இதனால் சின்ன தம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட முடியவில்லை.

ஒரு கட்டத்தில் கும்கிகளை சின்னதம்பி எதிர்த்து விரட்ட தொடங்கியது. இதனை தொடர்ந்து கும்கியானை மாரியப்பனை டாப்சிலிப் முகாமிற்கு திருப்பி அனுப்பிய வனத்துறையினர் அங்கிருந்து மற்றொரு கும்கியான சுயம்புவை அழைத்து வந்தனர்.

இந்த கும்கியுடனும் சின்னதம்பி நட்பு பாராட்ட தொடங்கியது. இதனால் சின்னதம்பி யானையை வன பகுதிக்குள் விரட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

தற்போது சின்னதம்பி யானை கண்ணாடி புதூர் பகுதியிலே கற்றி திரிகிறது. அங்கு பயிரிடப்பட்ட உள்ள வாழை, கரும்பு, வெங்காய பயிர்களை தின்று நாசம் செய்து வருகிறது.

அதனை பார்க்க ஏராளமான பொதுமக்கள் மைவாடி பகுதிக்கு குவிந்து வருகிறார்கள். ஆனால் சின்னதம்பி யானை பொதுமக்களை எந்த தொந்தரவும் செய்வதில்லை.

அதன் நடமாட்டத்தை 80-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள். கடந்த 13 நாட்களாக ஒரே பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி திரிவதால் நேற்று மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. அடிக்கடி கரும்பு தோட்டத்திற்குள் சென்று படுத்து கொண்டது.

இன்று அதிகாலை 3 மணியளவில் சற்று சோர்வு தெளிந்து சுமார் 1 கிலோ மீட்டர் வரை சென்றது. பின்னர் கரும்பு தோட்டத்திற்கு திரும்பி விட்டது.

சின்னதம்பி யானை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதன் தீர்ப்பை பொறுத்து தான் சின்னதம்பி யானை வனப்பகுதியில் விரட்டப்படுமா? அல்லது முகாமிற்கு கொண்டு செல்லப்படுமா? என்பது தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #ChinnathambiElephant
Tags:    

Similar News