செய்திகள்

அரியலூர், ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2019-02-07 17:58 GMT   |   Update On 2019-02-07 17:58 GMT
அரியலூர், ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர்:

அரியலூர் அண்ணாசிலையில் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் நடந்த 30-வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவ்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் போலீஸ் சூப்பிரண்டும் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். அண்ணா சிலையில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் தேரடி, சத்திரம், மாதா கோவில், ஒற்றுமை திடல், அரண்மனை தெரு, வண்ணான் குட்டை வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையில் முடிவடைந்தது.

இதையடுத்து போலீசார் அரியலூர் பஸ் நிலையம் பின்புறம் வாகன சோதனை மேற்கொண்டதில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனங்கள் ஓட்டிய 3 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டினார். ஹெல்மெட் அணியாமல் வந்த இரு சக்கர வாகனம் ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழியை ஏற்க செய்து பின்னர் புதிய ஹெல்மெட் ஒன்றை இலவசமாக வழங்கினார். இதில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, அரியலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்து தொடங்கி அரசு மருத்துவமனை, தா.பழூர் ரோடு, 4 ரோடு, திருச்சி ரோடு, பஸ் நிலையம் ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். முடிவில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் நன்றி கூறினார். 
Tags:    

Similar News