செய்திகள்

தூத்துக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

Published On 2019-01-31 16:30 GMT   |   Update On 2019-01-31 16:30 GMT
தூத்துக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி அருகே மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் நர்சிங் மாணவிகள் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.

தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியில், தொழுநோயால் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையிலேயே டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 42 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு முற்றிலும் குணமடைந்து வருகிறார்கள்.மேலும், சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீதம் தொழுநோய் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்றிட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பரிதா ஷெரின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா, மருத்துவ நலப்பணிகள் தொழுநோய் உதவி இயக்குனர் யமுனா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News