செய்திகள்

ஆரோக்கிய பாரத விழிப்புணர்வு - தமிழகத்துக்கு விருது

Published On 2019-01-30 10:18 GMT   |   Update On 2019-01-30 10:18 GMT
ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு என்ற செய்திகளை மக்களுக்கு சென்றடையச் செய்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. #HealthyBharat
சென்னை:

காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை யொட்டி இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் “சரிவிகித, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்” என்னும் கருத்தை அனைவரையும் சென்றடைய 1930-ல் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக தண்டியாத்திரையை நினைவு கூரும் வகையில் உலக உணவு நாளான அக்டோபர் 16 அன்று தொடர் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் தொற்றாநோய்களை வருமுன் தடுக்க இயலும். பாதுகாப்பான உணவை உண்பதன் மூலம் உணவு சார்ந்த நோய்களை தடுக்க இயலும் மேலும், செறிவூட்டப்பட்ட உணவுகளை உண்பதால் நுண்ணிய சத்துக்களின் குறைபாட்டை தவிர்க்க இயலும் என்பதை மையப்படுத்தி இந்த பேரணி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி உள்பட 12 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையானது, இந்திய தரநிர்ணய ஆணையம், பங்குதாரர்கள், உணவு வணிகர்கள் மற்றும் பல்வேறு துறையினருடன் கைகோர்த்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான உணவு, பாதுகாப்பான உணவு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு என்ற செய்திகளை மக்களுக்கு சென்றடையச் செய்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரிடம் தமிழகத்துக்கு சிறந்த மாநிலத்துக்கான விருதை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுடான், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தலைவர் ரீட்டா டியோட்டியா, முதன்மைச் செயல் அலுவலர் பவன்குமார் அகர்வால், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்புத்துறை கூடுதல் இயக்குநர் மரு. வனஜா மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர். #HealthyBharat

Tags:    

Similar News