செய்திகள்

வீடுகளுக்கு கூடுதல் வரி - கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-01-29 07:29 GMT   |   Update On 2019-01-29 07:29 GMT
வீடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு எதிர்ப்பு தெரிவித்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தையொட்டி பழைய கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தபால் தெரு, மேட்டுத்தெரு மற்றும் காந்தி நகர் உள்ளது. இப்பகுதிகளில் வரி விதிப்பு சீராய்வு என்ற பெயரில் வீட்டுவரி அதிக அளவில் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் பொதுமக்களின் கருத்தை கேட்காமல் குடிநீர் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியும், காலை, மாலை என இரு வேளைகளில் வழங்கப்பட்ட குடிநீரை தற்போது காலை மட்டும் 1 மணி நேரத்திற்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.

இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான வேலு தலைமை தாங்கினார். நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சிவா, விஜயலட்சுமி, பொது மக்கள் பிரதிநிதிகள் மோகனவேல், பலராமன், பிரமானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது பொதுமக்கள், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்குள் புகுந்தனர். அங்கு பணியில் இருந்த பேரூராட்சி அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கூறி அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் காந்தி நகரில் தனியார் பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சிறு பாலத்திற்கு பக்கவாட்டு தடுப்பு சுவர்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் இதுவரை அமைத்து தரவில்லை. இதனால் அப்பகுதியில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் கொசு மருந்து அடிப்பது இல்லை என்றும் குற்றம் சாட்டினர்.

கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், பேரூராட்சி அதிகாரிகள் நரேந்திரன், கருணாநிதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

வீடுகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு தொடர்பான பிரச்சனை குறித்து மீண்டும் முறையான ஆய்வு நடத்தி பொதுமக்களை பாதிக்காத அளவில் உரிய வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News