செய்திகள்

குன்னூர் ஏல மையத்தில் ரூ.10 கோடியே 84 லட்சத்துக்கு தேயிலைத்தூள் விற்பனை

Published On 2019-01-28 16:20 GMT   |   Update On 2019-01-28 16:20 GMT
குன்னூர் ஏல மையத்தில் ரூ.10 கோடியே 84 லட்சத்துக்கு தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டது.
குன்னூர்:

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். ஆனால் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான 4-வது ஏலம் கடந்த 24, 25-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 7 லட்சத்து 61 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 5 லட்சத்து 51 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 10 லட்சத்து 71 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 82 சதவீத விற்பனை ஆகும்.

விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.10 கோடியே 84 லட்சம் ஆகும். சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.256 எனவும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.253 எனவும் இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.84 முதல் ரூ.90 வரையும், உயர் வகை ரூ.125 முதல் ரூ.140 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.84 முதல் ரூ.88 வரையும், உயர் வகை ரூ.125 முதல் ரூ.140 வரையும் விற்பனையானது. விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட இந்த ஏலத்தில் ரூ.1 விலை உயர்வு இருந்தது. அடுத்த ஏலம் வருகிற 31, 1-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்தில் 13 லட்சம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.
Tags:    

Similar News