செய்திகள்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம்- எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

Published On 2019-01-26 08:14 GMT   |   Update On 2019-01-26 10:45 GMT
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். #edappadipalanisamy #sengottaiyan #GovtStaff

சென்னை:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 22-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் போராட்டம் நடைபெறவில்லை.

நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கைது செய்த போலீசார் முக்கிய நிர்வாகிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டுள்ளதால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆசிரியர்கள் வராத பள்ளிக்கூடங்களுக்கு தற்காலிகமாக புதிய ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாணவர்கள் நலன் கருதி உடனடியாக பணிக்கு திரும்புமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்- ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், “அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நல்ல முடிவை அரசு அறிவிக்கும்” என்று தெரிவித்தார்.


அதன் பிறகு தமிழக அரசு சார்பில் மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்த அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், “அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

மேலும் மாணவர்களின் கல்விக்கும், மக்கள் பணிக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். #edappadipalanisamy #sengottaiyan #GovtStaff

Tags:    

Similar News