செய்திகள்

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் வழக்கு தொடர்ந்தார்

Published On 2019-01-23 11:42 GMT   |   Update On 2019-01-23 13:24 GMT
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. #SamuelMathew #KodanadEstate #EdappadiPalanisamy
சென்னை:

கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கொடநாடு கொள்ளை குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, மேத்யூ இன்று விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், கொடநாடு கொள்ளை மற்றும் அதன்பின் நடந்த கொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுப்பது தொடர்பாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், சென்னையில் வக்கீல்களை சந்திக்க வந்துள்ளேன்.

சயான், மனோஜ் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. என் மீதும் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன். தமிழக அரசு மீது நான் குற்றம் சாட்டவில்லை. எடப்பாடி பழனிசாமி மீதுதான் குற்றம் சாட்டுகிறேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.



கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் என்னிடம் மேலும் ஆதாரங்கள் உள்ளன. அதை சரியான நேரத்தில் வெளியிடுவேன். இவ்விவகாரத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிப்பதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது. 1.10 கோடி ரூபாய் கேட்டு முதலமைச்சர் தரப்பில் மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி கல்யாணசுந்தரம் ஒப்புதல் அளித்துள்ளார். #SamuelMathew #KodanadEstate # EdappadiPalanisamy
Tags:    

Similar News