செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி மறுப்பு - காளையுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-01-22 16:41 GMT   |   Update On 2019-01-22 16:41 GMT
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, கீழக்கொளத்தூர் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி, காளையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் கீழகொளத்தூர் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி மக்கள் முன்னேற்பாடுகளை செய்து வந்தனர். இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அரசு அதிகாரிகள் வந்தனர். அப்போது, கிராமத்தின் மத்தியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஜல்லிக்கட்டு திடல் அமைத்ததால், பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என்று கூறி, ஜல்லிக்கட்டை நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், இட வசதிகள் அதிகமாக உள்ள இடத்தில் மைதானம் அமைத்தால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால் காலம், காலமாக நடுத்தெருவில் தான் ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம் என்று கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்ததை கண்டித்து நேற்று கிராமம் முழுவதும் உள்ள வீடுகள், தெருக்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கிராம மக்கள் கருப்பு கொடிகளை கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு, ஜல்லிக்கட்டு காளையுடன் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தின் நடுவே உள்ள நடுத்தெருவில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி தரும் வரை இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும், கிராம மக்கள் தெரிவித்தனர்.  #tamilnews
Tags:    

Similar News