செய்திகள்

காட்டு யானை தாக்கி உயிர் இழந்த வனக்காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2019-01-09 20:05 GMT   |   Update On 2019-01-09 20:05 GMT
காட்டு யானை தாக்கி உயிர் இழந்த வனக்காவலர் மாரப்பனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வனத்துறை மூலம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கோட்டூர் தரப்பு, கண்டகானப்பள்ளி கிராமத்தின் அருகே 6.1.2019 அன்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பச்சபனட்டி தரப்பு, கோட்டட்டி கிராமத்தைச் சேர்ந்த வனக்காவலர் மாரப்பன் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உயிர் இழந்த மாரப்பனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வனத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்போது, வீர தீர செயல் மற்றும் அசம்பாவித சூழ்நிலையில் உயிர் இழந்தால், அவர்களின் குடும்ப நலன் கருதி, வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை நான்கு லட்சத்திலிருந்து, பத்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க 6.10.2017 அன்று ஆணையிட்டிருந்தேன். இந்த ஆணையின்படி, இந்த துயரச்சம்பவத்தில் உயிர் இழந்த மாரப்பனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வனத்துறை மூலம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News