செய்திகள்

ஜோலார்பேட்டை-ஆம்பூரில் விபத்து: வாலிபர், ஆவின் ஊழியர் பலி

Published On 2019-01-08 11:18 GMT   |   Update On 2019-01-08 11:18 GMT
ஜோலார்பேட்டை-ஆம்பூரில் விபத்தில் வாலிபர் மற்றும் ஆவின் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த பல்லாண்டுகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தென்னரசு (22) பட்டதாரி வாலிபர்.

இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை திருப்பத்தூரில் இருந்து வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

திருப்பத்தூர் அடுத்த திரியாலம் என்ற இடத்தில் வந்தபோது திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி சென்ற தனியார் பஸ் தென்னரசு பைக் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த தென்னரசுவை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்தார்.இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் (60), ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர். இன்று காலை கன்னிகாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த எல்லப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் ஏலகிரியை சேர்ந்த பிரபு (32) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News