செய்திகள்

விளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Published On 2019-01-04 08:52 GMT   |   Update On 2019-01-04 09:21 GMT
விளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin

சென்னை:

சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கோவை, திருச்சி, ஈரோடு போன்ற 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக மின் உயர் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7 மாதமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். 40-க்கு 90 மீட்டர் அளவுக்கு அமைக்கப்படுவதால் ஒரு ஏக்கர் 2 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதனால் விவசாயிகள் பல முறை போராடி வந்த நிலையில் இப்போது சென்னைக்கு வந்து போராடும் நிலை எற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கின்றனர். அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

மின்துறை அமைச்சர் அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பாதிக்கப்படும் விவசாயிகள் முதல்- அமைச்சரை சந்திக்க வேண்டும். அவருடன் பேச வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதில்  கேபிள் வழியாக கொண்டு செல்ல சாத்தியமில்லை என அமைச்சர் கூறி வருகிறார். ஆனால் 400 கிலோ வாட் மின்சார கேபிள்களை சாலை ஓரம் அமைக்க முடியும்.

கேரளாவில் 325 கிலோ வாட் திறன் கொண்ட கேபிள் சாலையோரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கேபிள் வழியாக மின் வழித் தடங்களை கொண்டு செல்ல பரிசீலனை செய்ய வேண்டும். உயர்மின் கோபுரத்துக்கு பதிலாக தரையில் கேபிள் வழியாக செயல்படுத்தும் போது 10 சதவீத மின் இழப்பு சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மற்ற உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினர். #MKStalin

Tags:    

Similar News