செய்திகள்

தாதகாப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு- 2 வாலிபர்கள் கைது

Published On 2019-01-03 12:11 GMT   |   Update On 2019-01-03 12:11 GMT
தாதகாப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சுமலதா (வயது 31). இவருடைய பெற்றோர் வீடு அதே பகுதியில் உள்ளது. இதனால் நேற்று சுமலதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலை 4 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். அவர்கள் 2 பேரும் சேர்ந்து சுமலதாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.1000 மதிப்புடைய செல்போன், ரூ.150 ஆகியவற்றையும் பறித்தனர்.

இந்த வழிப்பறி சம்பவத்தால் சுமலதா அதிர்ச்சி அடைந்தார். அவர், ‘‘திருடர்கள்... திருடர்கள்.. யாராவது வந்து அவர்களை பிடியுங்கள்’’ என சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 வாலிபர்களையும் துரத்திச் சென்று சுற்றி வளைத்தனர். உடனே அந்த வாலிபர்கள் கத்தியை எடுத்துக்காட்டி யாராவது பக்கத்தில் வந்தால் குத்திக்கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து சுமலதா கண்ணீர் மல்க அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் சுமலதாவிடம் நகை மற்றும் பணத்தை பறித்தவர்கள் சேலம் குகை, பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த கார்த்திக் (21) மற்றும் தாதகாப்பட்டி, சண்முகாநகரை சேர்ந்த பிரகாஷ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று இரவு போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து செல்போனையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஆனால், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வழிப்பறி செய்த நகை ஆகியவற்றை என்ன செய்தார்கள்? என்பது பற்றி 2 பேரும் சொல்லவில்லை. இவர்கள் மீது 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் இருக்கின்றன. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News