செய்திகள்

டாஸ்மாக்கில் மது திருடி ஓட்டலில் விற்ற பட்டதாரி வாலிபர் நண்பர்களுடன் கைது

Published On 2019-01-03 11:52 GMT   |   Update On 2019-01-03 11:52 GMT
எம்.எஸ்.சி. படித்து விட்டு வேலை கிடைக்காததால் டாஸ்மாக்கில் மது திருடி ஓட்டலில் விற்ற பட்டதாரி வாலிபரை நண்பர்களுடன் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலி புதூரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கடந்த ஆகஸ்டு மாதம் ‌ஷட்டரை உடைத்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 1,321 மது பாட்டிகல்கள் திருட்டு போனது.

இதே போல் கடந்த செப்டம்பர் மாதம் அய்யாமடை பிரிவில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களும் திருட்டு போனது.

இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அம்மாதுரை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வால்பாறை ரோடு நா.மூ. சுங்கத்தில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சரவணக்குமார் (39), கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்த விநாயக மூர்த்தி என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் டாஸ்மாக் கடையில் திருடிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த மதுரை மேலூரை சேர்ந்த பார்த்தீபன் (26) என்பவரை பிடித்தனர்.அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் சரவணக்குமார் எம்.எஸ்.சி. பட்டதாரி ஆவார். படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. சரவணக்குமாரும், விநாயக மூர்த்தியும் சேர்ந்து கருமத்தம் பட்டியில் ஓட்டல் நடத்தி வந்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் திருடிய மது பாட்டில்களை அங்கு வைத்து விற்பனை செய்தும், வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆரோக்கிய தாஸ், மணிகண்டன், கணேஷ் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News