செய்திகள்

தேனி மாவட்டத்தில் ஒரே ஆண்டில் சாலை விபத்தில் 208 பேர் பலி

Published On 2018-12-31 11:12 GMT   |   Update On 2018-12-31 11:12 GMT
தேனி மாவட்டத்தில் ஒரே ஆண்டில் 996 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேனி:

தேனி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டில் நடந்த கொலை சம்பவங்களில் மொத்தம் 36 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டு விசாரணையில் இருந்த கொலை வழக்குகளில் 9 வழக்குகள் விசாரணை முடிந்து மொத்தம் 19 குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கு தூக்கு தண்டணையும், 15 பேருக்கு ஆயுள் தண்டணையும் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 2018-ம் ஆண்டில் 67 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 87 எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.

இதில் 2018-ம் ஆண்டில் கோர்ட்டு விசாரணையில் இருந்த போக்சோ வழக்குகளில் 5 வழக்குகள் விசாரணை முடிந்து 7 குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 பேருக்கு தூக்கு தண்டணையும், 2 பேருக்கு ஆயுள் தண்டணையும் 2 பேருக்கு தலா 8, 9 ஆண்டுகள் சிறை தண்டணையும் வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விபத்து வழக்குகளில் 2016-ம் ஆண்டில் மொத்தம் 1,365 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 283 பேர் உயிரிழந்துள்ளனர். 2017-ம் ஆண்டில் மொத்தம் 1,036 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். 2018-ம் ஆண்டில் 996 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்பு கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது போலீஸ் துறையின் சீரிய நடவடிக்கையால் இந்த வருடம் வெகுவாக விபத்துக்கள் குறைந்துள்ளது. அதிகரித்து வந்த வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டு மோட்டார் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு 7,508 பேர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 243 வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 2016-ம் ஆண்டில் 142 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 182 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 310 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆம் ஆண்டில் 186 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 214 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 549 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 2018-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 154 கஞ்சா வழக்குகளில் 157 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 530 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்ந்து கஞ்சா விற்று வந்த 6 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 2018 ஆம் ஆண்டில் 22 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருட்டு வழக்குகளில் கடந்த 2016-ம் ஆண்டில் 336 திருட்டு குற்ற வழக்குகளும், 2017-ம் ஆண்டில் 326 திருட்டு வழக்குகளும், 2018-ம் ஆண்டில் 299 திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் துரித நடவடிக்கையாலும் அதிகமாக இரவு ரோந்து அலுவல்கள் அனுப்பியும் அதிகமான முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை செய்யப்பட்டதாலும் திருட்டு வழக்குகள் கடந்த ஆண்டுகளை விட குறைந்துள்ளது. இதில் தொடர்ந்து திருட்டு குற்றங்கள் செய்து வந்த 8 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News