செய்திகள்

எச்ஐவி ரத்தம் செலுத்தியதால் பாதிப்பு: கர்ப்பிணிக்கு மனநல சிகிச்சை

Published On 2018-12-29 06:06 GMT   |   Update On 2018-12-29 06:06 GMT
எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி மற்றும் தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர்கள் மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர். #HIVBlood
மதுரை:

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் மருத்துவ பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.

அப்போது அவருக்கு ரத்தசோகை குறைபாட்டை போக்க சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது.

ரத்தம் செலுத்திய சில மணி நேரத்திலேயே அந்த பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக விருதுநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் கர்ப்பிணி பெண்ணின் ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவம் பற்றி அறிந்ததும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாத்தூர், விருதுநகர் வந்து நேரடியாக விசாரணை நடத்தினார்.

அவரது ஆலோசனையின் பேரில் கர்ப்பிணி பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்ததானம் செய்த வாலிபர், மிரட்டல்கள் காரணமாக தற்கொலைக்கு முயன்றார். அவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் மாதவி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவினர் நேற்று சிவகாசி அரசு ஆஸ்பத்திரி மற்றும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர், ரத்த வங்கி பொறுப்பாளர் மற்றும் ஊழியர்கள் என 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது.

அந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் பணியில் கவனக்குறைவாக இருந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

கர்ப்பிணி பெண் மற்றும் தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-


ரத்தம் செலுத்தப்பட்டதால் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான கர்ப்பிணி மற்றும் அவருக்கு ரத்ததானம் வழங்கிய வாலிபருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனித்தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேரும் நலமாக உள்ளனர்.

தொடர் சிகிச்சை காரணமாக எச்.ஐ.வி. நோய் தாக்கிய பெண்ணின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தற்போது அதிகரித்துள்ளது. அவருக்கு பிறக்கப்போகும் குழந்தையை எச்.ஐ.வி. பாதிப்பில் இருந்து காப்பாற்றுவதற்காக முயற்சி செய்து வருகிறோம்.

பொதுவாக கருவில் இருக்கும் சிசுவுக்கு நோய் பரவாது. ஆனால் பிரசவத்தின் போது குழந்தைக்கு நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. இதனை முற்றிலுமாக தடுக்கும் வகையில் கர்ப்பிணிக்கு தொடர்ச்சியாக தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கர்ப்பிணிக்கு பிரசவம் முடிந்த பின்னரும் பிறக்கும் குழந்தைக்கு 84 நாட்கள் தொடர்ந்து எச்.ஐ.வி. தடுப்பிற்கான சிகிச்சைகள் நீடிக்கும்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கர்ப்பிணியும், தற்கொலைக்கு முயன்ற வாலிபரும் மன உளைச்சலில் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் கீதாஞ்சலி தலைமையில் டாக்டர்கள் மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

நோய் பாதிப்பில் இருந்து விடுவிக்கும் வகையில் 2 பேரையும் மன ரீதியாக தைரியப்படுத்தி டாக்டர்களின் சிகிச்சையை எதிர்கொள்ள இந்த ஆலோசனை உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #HIVBlood #SatturPregnantWoman
Tags:    

Similar News