செய்திகள்

ஜனவரியில் அமலுக்கு வருகிறது பிளாஸ்டிக் தடை- பேப்பர் கப்களுக்கு விலக்கு

Published On 2018-12-27 15:01 IST   |   Update On 2018-12-27 15:51:00 IST
தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் தடை அமலுக்கு வர உள்ள நிலையில், பேப்பர் கப்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #Plastic #PlasticBan #KCKaruppannan
சென்னை:

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர் கருத்தரங்கம், கண்காட்சி நடந்தது.

இதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பேசியதாவது:-

தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே பிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்கவில்லை. ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேப்பர் கப்களில் பிளாஸ்டிக் இழை தடவப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதமாக உள்ளது. அதை 4 சதவீதமாக மாற்றினால் பேப்பர் கப்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


ஜனவரி 1-ந் தேதிக்குப் பின்பு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும்.

பிளாஸ்டிக் தடையின் மூலம் பாக்குமட்டை, கரும்பு சக்கை, மண்பாண்டங்கள், துணிப்பை போன்ற இயற்கை சார்ந்த பொருட்களுக்கு வரவேற்பு பெருகும். இதன் மூலம் விவசாயம், குடிசைத் தொழில் நன்கு வளர்ச்சி அடையும்.

பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்துக்குப்பின்பு திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Plastic #PlasctiBan #KCKaruppannan
Tags:    

Similar News