செய்திகள்

மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம் - 50 பேர் கைது

Published On 2018-12-24 15:55 IST   |   Update On 2018-12-24 15:55:00 IST
புதுவை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகிலுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகில் சாராய கடை, கள்ளுக்கடை இயங்கி வந்தது.

தற்போது புதிதாக மதுபான கடையும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவில், கல்வி நிலையம், குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் சாராயம், மதுபான கடைகள் இயங்கக்கூடாது. இதை அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக முதல்-அமைச்சர், சபாநாயகர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். ஆனால் 2 மாதமாக கடைகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என சோ‌ஷலிஸ்டு யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா என்ற கம்யூனிஸ்டு அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதற்காக இன்று காலை கருவடிகுப்பம் சித்தானந்தா கோவில் அருகில் நிர்வாகிகள் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு எஸ்.யூ.சி.ஐ. கம்யூனிஸ்டு மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.

தொகுதி செயலாளர் நாகராஜன், இளைஞர் அணி செயலாளர் பிரளயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் முத்து, தலைவர் சிவக்குமார், நிர்வாகி சிவசங்கரன் மற்றும் நிர்வாகிகள் சரவணன், சங்கர், இப்ராகிம், முனுசாமி, தன்ராஜ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் மதுக்கடை அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடையை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் சுமார் 50 பேரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News